விஜயதசமி நன்னாளின் வருகை நம் வாழ்வில் புதிய ஆற்றலின் தொடக்கத்தை அறிவிக்கட்டும் என்று ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆயுதபூஜை பண்டிகை, தீய சக்தியை அழித்த நல்ல சக்தியின் வெற்றியைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. 

நவராத்திரி கொண்டாட்டங்களில் மனித இனத்தைப் பேணிப் பாதுகாக்கும் துர்க்கை அன்னையைப் போற்றிப் பாடுகின்றோம். பத்தாம் நாளில் பகவான் ஸ்ரீராமர் மற்றும் துர்க்கை அன்னையின் வெற்றியை விஜயதசமியாக நாடு முழுவதும் பல்வேறு முறைகளில் கொண்டாடுகின்றோம்.

உண்மை, நன்மை மற்றும் நேர்மை ஆகிய நற்பண்புகளை நாம் நிலைநிறுத்தவும், நம் குடும்பங்களில் என்றும் காணாத வளத்தையும் வளர்ச்சியையும் காணவும் விஜயதசமி நன்னாளின் வருகை நம் வாழ்வில் புதிய ஆற்றலின் தொடக்கத்தை அறிவிக்கட்டும். 

இத்திருவிழா நம் மாநிலத்திலும் நாட்டிலும் அமைதி, நல்லிணக்கம், வளம் மற்றும் நல்ல உடல் நலத்தை நல்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
0
0
0
0
0
0