தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள புண்ணிய குளமான பொற்றாமரை குளத்தில் தான் தாமரை மலரில் இருந்து மகாலட்சுமியான கோமளவல்லி தாயார் தவமிருந்து சாரங்கபாணியை திருமணம் செய்தார் என்பது புராண வரலாறு. சுமார் 2½ ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த புனித குளத்தில் ஆண்டு தோறும் மாசிமகத்திருவிழாவின் போது தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த குளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மாகாமத்தின் பொழுது ரூ.72 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி நடைபெற்றது.

மேலும், குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்காக காவிர் ஆற்றிலிருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டது. இதற்காக காவிரி ஆற்றிலிருந்து ரெட்டியார்குளம் வடக்கு, ரெட்டியார்குளம் கிழக்கு, கும்பேஸ்வரர்கோவில் திருமஞ்சன வீதி, வடக்குவீதி வழியாக பொற்றாமரை குளத்திற்கு பிளாஸ்டிக் குழாய் பூமிக்கு அடியில் பதிக்கபட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் போது பொற்றாமரை குளம் நிரம்பியது.

இந்த நிலையில் கடந்த மாசிமகத்தின் போது பொற்றாமரை குளத்துக்கு தண்ணீர் நிரப்பட்டது. தெப்பத்திருவிழாவும் நடைபெற்றது. தற்போதைய கோடைகாலத்தில், குளத்தில் இருந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்ற தொடங்கியது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தற்போது இந்த குளம் தண்ணீர் இல்லாமல் வற்றி குளம் முழுவதும் செடிகள், கோரைப்புற்கள் வளர்ந்துள்ளது.

இன்று கோவில் நிர்வாக அலுவலர் ஆசை தம்பி நடவடிக்கையால் கிரேன் உதவியுடன் பொற்றாமரை குளத்தில் டிராக்டர் இறக்கப்பட்டு குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

3
0
0
1
0
0