தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் கும்பகோணம் பகுதியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கில் சில மாற்றங்கள் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கவும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை கடைபிடிக்கவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பொதுமக்கள் அவற்றை பொருட்படுத்தாமல் பொதுவெளிகளில் சுற்றி வருகின்றனர்.

கும்பகோணம் பகுதியில் கொரோனா பாதிப்பும், இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால்,
இப்பகுதியில் ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய இன்று கும்பகோணம் பகுதிக்கு திடீரென தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் அவர்கள் வருகை தந்து அனைத்து பகுதியிலும் வைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளையும் காவல் துறையினர் மேற்க்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் நேரடியாக பார்வையிட்டார். 

அப்போது மேம்பாலம் பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி ஆய்வு மேற்க்கொண்டார். சிலர் இ-பதிவு சான்றுகளையும், சிலர் மருத்துவமனைகள், மருந்தகங்களில் பணிபுரியும் அடையாள அட்டையையும் காட்டி விட்டு சென்றனர். ஆனால் ஆவணங்களும் இல்லாமல், முன்னுக்குப் பின் முரணான காரணத்தை சொல்லிய சிலரை எச்சரித்து அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தார்.

மேலும் அந்த பகுதியில் ஆய்வை முடித்து கொண்டு புறப்பட்ட காவல் கண்காணிப்பாளர் போகும் வழிகளில் நால்ரோடு, மடத்து தெரு, மேலக்காவேரி ஆகிய பகுதிகளிலும் ஆய்வு செய்தார். அதுமட்டுமல்லாமல் போகும்போது வாகனங்களில் சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பி விட்டுச்சென்றார்.

8
0
1
0
0
0