இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெருமளவில் பாதிப்புகளையும் உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், போக்குவரத்து காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் என அரசின் அனைத்து துறையினரும் தன் குடும்பத்தை மறந்து, வீட்டை மறந்து, பணியாற்றுவது, அவர்களின் கடமை என நாம் நினைத்தாலும், அது பொதுமக்களின் உயிரை காக்க வேண்டும் என்ற அவர்களின் மனிதாபிமானத்திற்காக மட்டுமே,
இத்தனை துறையினர் பொதுமக்களின் உயிரை காக்க போராடிக்கொண்டிருந்தாலும், பொது மக்கள் இவர்களின் அறிவுரைகளை கேட்காமல் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மற்ற நாட்களில் நடமாடுவதைப்போல் இந்த கொரோனா காலகட்டத்திலும் வெளியில் சுற்றிவது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.
வெளியில் வரும் ஒரு சிலர் மருத்துவமனைக்கும் மருந்தகத்திற்கு செல்வதாகவும், அதற்கான ஆவணங்களையும் வைத்திருப்பதால் அவர்களின் அவசர நிலையை கருத்தில் கொண்டு அவர்களை காவல் துறையினர் அனுப்பி வைக்கின்றனர். ஆனால் பலர் சம்மந்தமில்லாத காரணத்தை சொல்வதால் மட்டுமே அவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூட இன்று கும்பகோணம் பகுதியில் பொதுமக்கள் சாதாரணமாக வெளியில் செல்கின்றனர்.
கும்பகோணம் நால்ரோடு, மேம்பாலம், தஞ்சாவூர் மெயின் சாலை, மகாமகக்குளம், மடத்து தெரு, தாராசுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பொதுமக்கள் சுற்றி கொண்டிருக்கின்றனர்.
கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் காவல்துறையினரும், கும்பேஸ்வரர் கோவில் அருகில் போக்குவரத்து காவல்துறையினரும் சாலையில் தடுப்பு அமைத்து பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். அப்போது மாஸ்க் அணியாம சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்ததுடன், ஆவணங்கள் இல்லாத சில வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.