மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை செய்த ஊதியத்தை கொடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், வேலை செய்த மூன்று மாத ஊதியத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உடனடியாக வழங்க கோரி திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் மாத்தூரிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பேரணியாக புறப்பட்டு நாச்சியார்கோவில் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 



இதனால் கும்பகோணம் - திருவாரூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட சிபிஎம் கட்சி மற்றும் 100 நாள் வேலை செய்பவர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களை குழந்தைகளுடன் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். 

தகவலறிந்து திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் வீரமணி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா, நாச்சியார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீபாவளிக்குள் நிலுவையில் உள்ள மூன்று மாத 100 நாள் ஊதியத்தை தமிழக அரசிடம் பெற்று வழங்குவது என உறுதி அளித்தனர்.

போராட்டத்திற்கு ஒன்றிய குழு செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். போராட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால் துவக்கி வைத்தார். போராட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தருமையன், ரங்கசாமி, முருகன், ஆரோக்கியதாஸ், முருகன், பார்த்திபன், சத்யராஜ், லதா, பவானி உள்ளிட்ட ஏராளமான சிபிஎம் கட்சியினர் மற்றும் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் 100 நாள் வேலை சம்பளத்தை உடனடியாக வழங்க கோரியும் முழக்கமிட்டனர்.

0
0
0
0
0
0