.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை கிராமத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் ரமேஷ்குமார் என்பவர் வீட்டில் வெடி பொருட்கள் மற்றும் வெடி தயாரிப்பதற்கான மருந்து பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.



அதன் பேரில் நாச்சியார்கோயில் காவல் ஆய்வாளர் ரேகாராணி தலைமையிலான போலீசார், தாசில்தார் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் நாகரசம்பேட்டை அக்ரஹாரத் தெருவில் உள்ள ரமேஷ் குமார் வீட்டிற்குள் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அங்கு வெடி பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.



அப்போது இடதுபுறத்தில் பூட்டப்பட்டிருந்த குடோனை திறக்குமாறு வீட்டில் இருந்த ரமேஷ்குமார் உறவினர்களிடம் போலீசார் கூறியுள்ளனர். அதற்குள் உரம் மூட்டைகள் இருப்பதாகவும் வேறு எதுவும் இல்லை என திறக்க மறுத்துள்ளனர். அதேபோல் குடோனில் இருந்து உரம் வாசனை அடித்துள்ளது. பின்னர் போலீசார் அரையின் கதவை உடைத்து பார்த்தபோது மூட்டை மூட்டையாக நாட்டு வெடிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. வெளி நபர்கள் யாரும் கண்டுபிடித்து கூடது என்பதற்காக .வெடி மூட்டைகளை சுற்றி உரங்களை தூவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.



பின்னர் பதுக்கி வைத்திருந்த 557 கிலோ நாட்டு வெடிகள் மற்றும் நாட்டு வெடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய 204 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 20 லட்சம் இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த வாரம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள வெடிக்கடைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதன் காரணமாக அங்கு வெடிக்கடை நடத்தி வரும் சரவணன் என்பவர் தீபாவளி விற்பனைக்காக சட்டவிரோதமாக தான் தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகள் மற்றும் நாட்டு வெடி தயாரிப்பதற்கான மருந்து பொருட்களை, தன்னுடைய நண்பரான ரமேஷ்குமார் வீட்டின் குடோனை வாடகைக்கு எடுத்து நாட்டுவெடிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ரமேஷ் குமார், சரவணன், சந்திரசேகர் ஆகிய மூன்று பேர் மீது நாச்சியார் கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

1
0
0
0
0
0