இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தவர். இவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளு பேரன் ஆவார். இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்ற பன்முகங்களை பெற்றுள்ளார்.
காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான, சைத்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவருடைய மகள் சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். லாராவின் அறை கதவு வெகுநேரமாக திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்துக் கொண்டு அவருடைய பெற்றோர் உள்ளே சென்றனர்.
அப்போது மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த லாராவை அவருடைய பெற்றோர் மீட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் அதிகாலை 3 மணி அளவில் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து லாராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர் மன அழுத்தம் காரணமாக இறந்திருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.