கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்திய அறிவியல் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் 29.8.2023 முதல் 31.8.2023 வரை மூன்று நாள் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் T. பாலமுருகன் தலைமை வகித்து பேசுகையில்: அறிவியல் தொழில்நுட்பமும், இன்றைய உலகின் முன்னேற்றம் மற்றும் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்த பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளரும் கல்லூரியின் துணை முதல்வருமான முனைவர் கலைமணி சண்முகம், பங்கேற்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று இத்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமின் நோக்கம் மற்றும் பயன்களை எடுத்துரைத்தார். இக்கல்லூரியின் கல்விப் புலத்தலைவர் முனைவர் M. ருக்மாங்கதன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினார்.
இதன் துவக்க விழாவில் கும்பகோணம் அட்லஸ் ஹவுஸ் இன்டீரியர் நிறுவனர் சிராஜுதீன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 150 இறுதி ஆண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி முகாமின் வாயிலாக தேசிய தகுதி வாய்ந்த திறன் பயிற்சிகளை மாணவர்கள் பெருவதுடன், புதுமையான அணுகுமுறைகளில் தொழில் முனைவு அனுபவம் மற்றும் உயர் தொழில்நுட்ப திறன் தேவைப்படும் வேலை வாய்ப்பை பெருவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டனர்.
மேலும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் அறிவியல் அலுவலர் முனைவர் A.ரமணன் கலந்து கொண்டு பேசுகையில் சமுதாய மேம்பாட்டில் அறிவியல் தொழில்நுட்பமும், மாணவர்களின் பங்களிப்பு குறித்தும், அதற்கு இப்பயிற்சி முகாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் எடுத்துரைத்தார். பயிற்சி முகாமின் மூன்றாம் நாள் நிறைவு விழா நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ஆல்வின் மார்ட்டின் ஜோசப் ஆல்பர்ட் கலந்து கொண்டு பேசுகையில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வழிமுறைகள், தொழில்துறை வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பயனாளர்களுக்கு வழங்கும் சலுகைகள், மானியங்கள் போன்றவற்றை எடுத்துரைத்து பங்குபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பயிற்சி முகாமின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் M. தியாகராஜன் மற்றும் N. முகமது ஹாரிஸ் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்