தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் விநியோகத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் தமிழகத்தின் மருத்துவ தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது ஆலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற படுக்கை வசதிகள் இல்லாமலும், ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. துத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கே ஆக்ஸிஜன் மட்டுமே தயாரிக்கப்படும் என்று உறுதியோடு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசும் அளித்த உத்தரவை அடுத்து உற்பத்தியை தொடங்குவதற்கான சோதனை ஓட்டமும் முடிக்கப்பட்டது. இந்நிலையில், ஆக்ஸிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக கண்டெய்னர் லாரிகளும் ஆலைகளுக்கு கொண்டு வரப்பட்டது. புதன்கிழமை இரவு ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்ஸிஜனை விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை காலை தொடங்கியது. ஆலையில் இதையடுத்து ஆக்ஸிஜன் நிரப்பிய முதல் கண்டெய்னர் லாரி போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து புறப்பட்டது. கணிகாணிப்புக்குழுத் தலைவரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ் ஆக்ஸிஜன் விநியோகத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதற்கட்டமாக 4.82 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் 98 சதவீதம் சுத்தமானது. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் தமிழகத்தின் மருத்துவ தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். மேலும் வரும் நாள்களில் தினமும் 35 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றும் ஆட்சியர் கூறினார்.
6
3
1
0
0
0