தான் பேசிய பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். என்ன நடந்தது? மதுரை மாவட்டம் மேலவளவு பகுதியில் கடந்த ஜூன் 30-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைக் கண்டித்தும் ஆவேசமாக பேசினார் திருமாவளவன். 

சாதிய பாகுபாட்டை மக்கள் மத்தியில் தூண்டுபவர்களை விமர்சித்த திருமாவளவன், சில வார்த்தைகளை காட்டமாக பயன்படுத்தினார். அதில் சில சொற்கள் மாற்றுத்திறனாளிகளை குறிப்பிடும் படியாக இருந்தது. திருமாவளவனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வந்தன. மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். 

மாற்றுத்திறனாளிகள் சங்கங்களும் திருமாவளவனுக்கு கண்டனங்களை பதிவு செய்தன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திருமாவளவன் இன்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக குரல் கொடுக்கிற இயக்கம் விசிக. ஜூன் 30-ம் தேதி மேலவளவில் நடந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மனம் நோகும் வகையில், என்னையும் அறியாமல் சில ஓரிரு சொற்கள் வந்து விழுந்தன. அதற்காக உடனே எனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன். இனி அவ்வாறு நிகழாவண்ணம் பார்த்துக் கொள்கிறேன். நான் அப்படி பேசியதற்கு வருந்துகிறேன். மாற்றுத்திறனாளி தோழர்கள் பொறுத்தருளவும்" என திருமாவளவன் கூறியுள்ளார்.

1
0
0
0
0
0