சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அவசர பயணத்திற்காக வாடகை கார்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்காக ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற வாடகை கார் வசதிகள் உள்ளன. இந்த செயலியில் நீங்கள் பதிவு செய்தால் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று வரலாம். ஆனால் மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தேவை அதிகரிக்கும் போது கட்டணத்தை உயர்த்துவதும் உண்டு. இதனால் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். சில சமயம் வாடகை கட்டணம் தொடர்பாக டிரைவர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்படுவதும் உண்டு.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் தற்போது நீங்கள் விரும்பிய கட்டணத்தில் வாடகை காரில் செல்ல இன்டிரைவ் என்ற புதிய செயலி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலியில் நீங்கள் எந்த இடத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள், அதற்கு இவ்வளவு தான் கொடுக்க முடியும் என்று தெரிவித்தால் போதும். அதற்கு ஏற்ப உங்களுக்கு வாடகை கார் கிடைக்கும். இதனால் நீங்கள் விரும்பிய கட்டணத்தில் வாடகை காரில் பயணிக்கலாம். தேவையில்லாமல் டிரைவருடன் வாக்குவாதம் ஏற்படுவது தடுக்கப்படும். இது தொடர்பாக அந்த செயலியின் தென் ஆசிய மேலாளர் பவித் நந்தா ஆனந்த் கூறியதாவது:-

இந்த வசதி ஏற்னவே ஆஸ்திரேலியா, ரஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 47 நாடுகளில் 700 முக்கிய நகரங்களில் உள்ளது. இந்தியாவில் லக்னோ, ஐதராபாத், சண்டிகார் நகரங்களில் உள்ளது. தற்போது சென்னையில் இந்த திட்டம் செயல்படுத்தபப்பட்டு உள்ளது. இதற்கு சென்னையில் ஆயிரம் டிரைவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் டிரைவர் தொழிலில் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களிடம் சான்றிதழ்கள் அனைத்தும் முழுமையாக பரிசோதனை செய்தபிறகே நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். வாடிக்கையாளர்கள் எங்கிருந்து செல்கிறார்களோ அவர்களை அருகில் இருக்கும் டிரைவர்கள் தொடர்பு கொண்டு சரியான நேரத்தில் செல்வார்கள். இதனால் நேரம் மிச்சமாகும், காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக கட்டணம் செலுத்துவதில் இருந்து தவிர்க்கலாம். இந்த செயலி மூலம் நீங்கள் செல்ல வேண்டிய இடம் குறித்து டிரைவர் மற்றும் வாடிக்கையாளர்களின் சரியான வழி பகிரப்படும். இதனால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

0
0
0
0
0
0