உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கொலை செய்யப்பட்டாலும் அந்நாட்டு அரசாங்கம் தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை என்று அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

உக்ரைன் போர் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியை கொலை செய்ய ரஷ்யா ரகசியமாக முயற்சி செய்து வருவதாக அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன. போர் தொடங்கிய சில தினங்களிலேயே உக்ரைன் அதிபரே இந்த விஷயம் குறித்து தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார். ரஷ்ய ராணுவத்தின் முதல் குறி தானும், தனது குடும்பத்தினரும் தான் என்று அவர் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம்ஸ் இதழ் சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை கொல்ல ரஷ்யாவின் சிறப்புப் படைப்பிரிவு மூன்று முறை முயற்சித்ததாகவும், ஆனால், அவற்றில் இருந்து அவர் தப்பிவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கெனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "ரஷ்யாவின் கொலை முயற்சி குறித்து உக்ரைன் அதிபருக்கு நன்றாக தெரியும். எனவே அவரது பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஒருவேளை அவர் கொல்லப்பட்டாலும் கூட, உக்ரைன் அரசாங்கம் எந்த சிக்கலும் இன்றி தொடரும். அதற்கான ஏற்பாடுகளை உக்ரைன் அமைச்சரவை செய்துள்ளது" என்றார்.

0
0
0
0
0
0