வேளாண்சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை, டெல்லி எல்லையில் விவசாயிகள் கூட்டாக போராடி வந்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடம் நடைபெற்ற இந்தப் போராட்டம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. குறிப்பாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட கனடா என்றுமே துணைநிற்கும் என்றும், போராட்டச் சூழல் கவலையளிப்பதாக உள்ளது என்றும் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று, கனடா தூதரை அழைத்து இந்தியா எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு நிலைமை மோசமாகியுள்ளதால், பாதுகாப்பு கருதி குடும்பத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
இதையடுத்து எப்போதும் இந்திய தலைவர்களை விமர்சிக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கனடா பிரதமர் ட்ரூடோ இந்திய எதிர்ப்பாளர்களை ஊக்குவித்தார். இப்போது அவரது நாட்டில் எதிர்ப்புகளுக்கு மத்தியில், அவர் ஒரு ரகசிய இடத்தில் மறைந்துள்ளார். எதிர்ப்பாளர்கள் அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். ம்ம்.. கர்மா திருப்பி தாக்குகிறது” என்று குறிப்பிட்டு, கனடா பிரதமரை விமர்சித்துள்ளார்.
0
0
0
0
0
0