கும்பகோணம் நகராட்சியை தமிழக அரசு சில வாரங்களுக்கு முன் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதில் சோழன்மாளிகை, பட்டீஸ்வரம், சுவாமிமலை போன்ற பல கிராமங்கள் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

சோழன்மாளிகை பொதுமக்கள் கும்பகோணத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதை வரவேற்பதாகவும், ஆனால் சோழன்மாளிகை கிராமத்தை மாநகராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊராட்சி மன்ற தலைவரிடம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் செய்தனர். அப்போது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மாநகராட்சியில் சோழன்மாளிகை பகுதியை  இணைப்பதற்கு நிச்சயம் எதிர்ப்பு தெரிவித்து, விலக்கு பெற நடவடிக்கை மேற்கொள்வேன் என்று ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

கும்பகோணத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர், தமிழக அரசின் தலைமை கொறடா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர், கும்பகோணம் மற்றும் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் சோழன்மாளிகை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மாநகராட்சியில் தங்கள் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தகவல்களை எடுத்துரைத்தார். மேலும் சோழன்மாளிகை பகுதி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அதனை முதல்வருக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்த அனைத்து தகவல்களையும் அரசுக்கு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தற்போது கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் சோழன்மாளிகை ஊராட்சிக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அறிந்து சோழன்மாளிகை ஊராட்சி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர். அப்போது நூறு நாள் பணி செய்யும் சில பெண்கள், கும்பகோணம் மாநகராட்சியில் சோழன்மாளிகை ஊராட்சிக்கு விலக்கு பெற்று எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக்கொடுத்ததற்கு நன்றி என கன்ணிர் மழ்க கூறினர். அப்போது பொதுமக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
2
0
1
0
0
0