தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகள் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 23 முதல் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்படவும், செப்டம்பர் 1 முதல் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளில் சுழற்சி முறையில் பாடம் கற்பிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கொரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகள் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்குச் சுழற்சி முறையில் பாடம் கற்பிக்கவும், மதிய உணவுத் திட்டம் செயல்படவும் அனுமதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

உயர் வகுப்புகள் செயல்படுவதைக் கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15ஆம் நாளுக்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும். ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் அனைத்துக் கல்லூரிகளும் செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். அனைத்துப் பட்டயப் படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

மழலையர் காப்பகங்கள் செயல்படவும் அனுமதிக்கப்படும். அங்கன்வாடி மையங்கள் செப்டம்பர் 1 முதல் மதிய உணவு வழங்குவதற்காகச் செயல்பட அனுமதிக்கப்படும். அங்கன்வாடி மைய ஊழியர்கள் தடுப்பூசி போட்டிருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் ஆகஸ்டு 23 முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும். திரையரங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும். கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதுவரை இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்துக் கடைகளும் செயல்பாடுகளும் ஆகஸ்டு 23 முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்குப் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படும். நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிகளுக்காக மட்டும் 50 விழுக்காடு பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெற அனுமதிக்கப்படும். தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது
11
2
0
0
0
0