கும்பகோணம் அருகே உள்ள பழையாறை. தமிழக வரலாற்றில் சோழப் பேரரசர்கள் ஆட்சி செய்த காலத்தில்  மிக முக்கியத்துவம் பெற்ற பெருநகரமாக விளங்கியது.

ராஜராஜன் சோழன் முதலான சோழப்பேரரசர்களும் குந்தவை பிராட்டியார் உள்ளிட்ட சோழப்பேரரசிகளும் தங்கியிருந்த இடம் இன்றுவரை சோழன்மாளிகை எனவும், சோழப்பேரரசின் படைகள் இருந்த இடம் ஆரியப்படையூர், பம்பப்படையூர், புதுப்படையூர், மனப்படையூர் எனவும், உடை வாள்கள் தயாரித்த இடம் உடையாளூர் எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.

ராஜராஜ சோழன் சோழப்பேரரசராக முடிசூட்டிக் கொண்டு தென்னிந்தியா முழுவதும் தனது பேரரசை விரிவுபடுத்தி, தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல சிற்றரசர்களையும் வெற்றி பெற்று வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் போருக்கு புறப்படும் முன்பும், சோழன்மாளிகையில் உள்ள இளங்காளி அம்மனையும், எல்லை தெய்வமான முனீஸ்வரனையும் வணங்கி விட்டு சென்றதாகவும், காலப்போக்கில் முனீஸ்வரன் ஆலயம் சிதிலமடைந்ததாகவும், சோழர்கள் பயன்படுத்திய ஆயுதங்களை அந்த இடத்தில் வைத்து இன்றுவரை வழிபட்டு வருவதாகவும், இந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தின் பல பகுதிகளில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகவும், அந்த மாதத்தில் பெண்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அம்மன் கோவிலுக்கு சென்றாலும் சோழன்மாளிகை பொதுமக்கள் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை இந்த முனீஸ்வரன் ஆலயத்தில் மாவிளக்கு பூஜை செய்து பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.
2
10
0
0
0
0