ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்றி தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் வாயிலாக இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் மனு அனுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில செயலாளர் கா.பாலா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:

வருகின்ற அகஸ்ட் 15 ம் தேதி 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு இந்திய திருநாடே காத்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த 1974 மற்றும் 1976ம் ஆண்டில் பிரதமராக இருந்த காங்கிரஸ் கட்சியின் இந்திரா காந்தி அம்மையார், தமிழக அரசுக்கு சொந்தமான இராமநாதபுரம் ஜமீனுக்குரிய சர்வே எண்.1250, பரப்பளவு 285.20 ஏக்கர் அடங்கிய கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்துவிட்டார். இந்திய மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், தீவுக்கு சென்று  வழிபடுவதற்கும் அனுமதி இருக்கிறது.

தமிழக மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் சென்று கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் பொழுது அத்துமீறி நுழைந்ததாக அவர்களை கைது செய்தும் படகுகளை பறிமுதல் செய்தும் இலங்கை சிறையில் அடைக்கிறார்கள். தற்போது தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை சார்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த மாதம் இருபத்து எட்டாம் தேதி ஆழ்கடலுக்கு பத்து நபர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் 01.08.2021 அன்று மாலை விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது சரமாறியாக சுட்டனர். அதில் கலைச்செல்வன் என்ற மீனவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே காஷ்மீரில் 370 Articke ஐ ரத்து செய்து கவர்னர் ஆட்சியை அமல் படுத்தி தீவிரவாதத்தை ஒடுக்கி அங்கே இந்திய தேசியக்கொடியை பறக்க வழிவகை செய்தது போல், இலங்கை வசமுள்ள கச்சத்தீவை மீட்டு இந்திய தேசியக்கொடியை ஏற்றி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வழிவகை செய்தும், சர்வதேச கடல் எல்லையை நிர்மாணம் செய்தும், மீனவர்கள் நலன் காக்க வேண்டுமாய் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
1
0
0
0
0
0