ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள அணியில் பங்கேற்ற திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் இருவரும் தாயகம் திரும்பியுள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருவருக்கும் பெற்றோர், உறவினர், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்று  வாழ்த்தி அழைத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, வீராங்கனை சுபா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட எங்களுக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு நன்றி. ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற கடுமையான பயிற்சி மேற்கொண்டாலும் கூட ஒலிம்பிக் களம் அதைவிட கடுமையாக இருக்கிறது. இந்திய வீரர்களுக்கு இன்னும் கூடுதல் பயிற்சி தேவை. இன்னும் கூடுதலாக பயிற்சி பெற்று அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வோம்.

இந்திய வீரர்களுக்கு துவக்க நிலையிலிருந்தே அடிப்படை பயிற்சி முதல் அனைத்து பயிற்சியும், ஊக்கமும் வழங்க வேண்டும். அப்படி வழங்கும் பட்சத்தில் அது போட்டிகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கடுமையான பயிற்சி எடுத்தும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை, இன்னும் அதிக பயிற்சி எடுக்க வேண்டும் என்பதை எங்களின் தோல்வி உணர்த்தி உள்ளது என்றார்.

தொடர்ந்து வீராங்கனை தனலட்சுமி கூறுகையில், அரசு வேலை வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை களமிறக்காததற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. கடந்த காலங்களில் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் தமிழ்நாட்டுக்கு பெரிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் தற்போது  வாய்ப்புகள் வருகிறது. வரும் காலங்களில் இன்னும் அதிகமான வாய்ப்புகள் வரும் என நம்புகிறோம் என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்த தனலட்சுமி, தாயின் கடும் போராட்டங்களுக்கு இடையே பயிற்சி பெற்றார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற பிறகு இவரது சகோதரி உயிரிழந்தார். வழியனுப்பி வைத்த அக்கா இறந்ததை அறிந்து விமான நிலையத்தில் கண்ணீர் விட்டு, கதறி அழுதார் தனலட்சுமி.
0
0
0
0
0
0