பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், “ சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இன்று மற்றும் நாளை இரவு நேரத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும் இடையே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தனியார் நிறுவன பணியாளர்கள் பணியிடத்திலிருந்து வீடு செல்ல ஏதுவாக பேருந்துகள் இயக்கப்படும். பேருந்து தேவைப்பட்டால் தனியார் நிறுவன ஊழியர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. சிறப்புப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் மக்கள் www.tnstc.in என்ற தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.” என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிக்கையில், “ ஊரடங்கின் காரணமாக சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக அனைத்து வாகனங்களும் இன்று நாளையும் இயக்கப்படும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகள் மக்களிடம் அதிக கட்டணம் வசுலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
0
0
0
0
0
0