சென்னை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை கடத்திவந்த தான்சானியா நாட்டு ஜோடியை கைது செய்தனர். ஒரு ஆணும், பெண்ணும் விமானம் மூலம் இந்தியாவுக்கு போதைப்பொருள் கடத்தி வருவதாக, சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், வௌிநாட்டு விமானங்களில் இருந்து இறங்கி வரும் பயணிகளை கண்காணித்த அதிகாரிகள், கத்தார் நாட்டு விமானத்தில் இருந்து இறங்கி வந்த நடுத்தர வயதுள்ள ஒரு ஜோடியிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் பாஸ்போர்ட்டை வாங்கிப்பார்த்த போது தான்சானியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் அவர்கள் வைத்திருந்த இரண்டு பைகளை சோதனை செய்ததில், அடிப்பகுதியில் பிளாஸ்டிக் பாக்கெட்டுக்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹெராயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வாசம் தெரியாமல் இருக்க, சமையல் மசாலா பவுடரை தூவி வைத்துள்ளனர். உடனே இருவரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பிடிபட்ட ஹெராயினின் அளவு 15.6 கிலோ என்றும், அதன் மதிப்பு 100 கோடி ரூபாய் என்றும் தெரிவித்தனர். இருவரிடமும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

3
0
1
0
0
0